Thursday, January 20, 2011

மொழியுமாகிய தமிழ்


மொழியுமாகிய தமிழ்


தமிழ் - இந்தச் சொல்லினை மொழிகையில் என் மனதில் தோன்றுவது என்ன? இமை கவிழ்த்து சிந்தித்துப் பார்கிறேன் - கவிதை,தொன்மை, இசை, பாரதி, காதல், வீடு , உறவு, சினிமா... இவை அனைத்தையும் வீழ்த்தி முன் வந்து நிற்கும் உணர்வு 'எம் மொழி', 'எம் மக்கள்' , 'யாம் போற்றும் வரலாறு'."Tamils have strong feelings towards the Tamil language" இவ்வாசகத்தை "Tamil People" என்ற பகுதியின் கீழ் விக்கி இணையத்தளத்தில் படிக்கையிலே என்னை அறியாமல் உதட்டில் ஒரு புன்னகை, நெஞ்சினில் ஒரு கர்வம் பொருந்திய செருக்கு. அதே சமயம், சில வட இந்திய (நம் வழக்குப்படி ஆந்திராவிற்கு மேல்!) மாநிலங்களை சார்ந்த நண்பர்களின் கூற்றுப்படி -"தமிழர்கள் கொஞ்சம் அதிகமாகவே, அதாவது தமிழ் வெறும் மொழி மட்டும் என்பதற்கு அப்பாற்பட்டு அதில் பற்று கொண்டிருகின்றனர்". இது ஏன், எப்படி என்று நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர், அதாவது இத்தனை சாதிகளும், மதங்களும், அரசியல் கட்சிகளும், இல்லாத ஏற்றத் தாழ்வை காட்டும் தொழில் துறைகளும் தோன்றி, மனிதரை பங்கு போட்டுக் கொள்ளும் முன்னரே மிக நேர்த்தியான இலக்கணங்களுடன் உருவானது நம் தமிழ் மொழி. அம்மொழியினால் அடையாளம் காணப்படுவதில் பெருமை கொள்ளுதல் தவறில்லையே? தமிழை 'வெறும்' மொழி என்று சொன்னால் அது எனக்கு வேடிக்கையாகத் தோன்றும், இன்னும் சொல்ல போனால் மக்களால் உருவாகி, அவருள் ஊடுருவி, உள்மனத்தில் உறைந்து நிற்கும் எந்தவொரு மொழியும் வெறும் கருத்துப் பரிமாரும் கருவி மட்டும் அன்று. ஏனெனில் அப்படியொரு மொழியானது கவிதையாக, கதையாக, நாடகமாக, இன்றைய சினிமாவாக, இசையாக, நிதம் சிந்திக்கும் சிந்தனையாக, நம் கற்பனையாக, பல ஆயிரமாயிரம் இலக்கியமாக நம்முடன் ஒன்றாய் கலந்து விட்டுருகின்றது. காதலர்களுக்கு கவிதை தேடும் போது மொழியின் இனிமை புரிந்து விடுகிறது, ஒரு சிலருக்கு, நிகழ்வுகளை மொழி மாற்றும் போது அதன் அழகு புரிந்து விடுகின்றது. மேற்பட்டதை நான் குறிப்பிட்டுச் சொல்லும் காரணம் ஒரு வேடிக்கையான அனுபவத்தை அம்மொழியினுள் இயற்கையாய் புதைந்த உணர்வு மாறாமல் மொழி பெயர்த்து அதே நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவது மிகவும் கடினம், என் அனுபவம் அதற்கு சாட்சி!


சரி, நம் மொழியின் பெருமையை சிறிது பேசியாகிவிட்டது, இப்போது நடைமுறையில் இருப்பதைப் பார்ப்போம். இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் கடந்து, மன்னாராட்சி, வெள்ளயன் ஆட்சி, மக்காளாட்சி என அனைத்தையும் கண்டு, விவசாய புரட்சி, உற்பத்திப் புரட்சி, கணினிப் புரட்சி என பலவற்றையும் தாண்டி இன்றும் நம்முடன் இருக்கிறது நம் தமிழ் மொழி, ஆனால் அது ஆரோகியமாக இருக்கிறதா, நாம் மொழியுடனான உறவு, தேவை முன் போல் நீடிக்கிறதா? என்றால் என் பதில் ஆம்! இல்லை! என இரண்டும்.

உயிர்களைப் போல தான் மொழிகளும், அதற்கும் பரிணாம வளர்ச்சி, "Survival of the Fittest" என்கிற கோட்பாடுகள் பொருந்தும். காலப்போக்கில் மனிதர்கள் மாற மாற அவர் தேவையை பூர்த்தி செய்வாதாய் இருக்க வேண்டிய கட்டாயம் மொழிக்கும் ஏற்படுகிறது.வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் செலவழிக்கக் காசு தர வேண்டிய மொழியாக மாற வேண்டி இருக்கிறது.தமிழ் பல இடையூறுகளைத் தாண்டி இன்று கணினிக்குள்ளும் புகுந்து வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்ததே, இன்றும் வான்போற்றும் சிறந்த தொன்மையான இலக்கிய நூல்கள் மக்களுள் உலா வருகின்றன என்பதும் சாதனையே ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் மதிப்பும், மரியாதையும், முக்கியமாக 'அளப்பெற்ற செல்வமாகிய' காசும் தமிழினால் கிடைக்கிறதா என்றால் பலரும் கூறுவது 'இல்லையென்பதே'.என் தலைமுறையின் பொதுவான கருத்து- கணினிக்குச் சிறந்த மொழி 'தமிழ் இல்லை', அறிவியல்குச் சிறந்த மொழி 'தமிழ் இல்லை', அது மட்டுமின்றி இத்துறைகளில் உள்ள வல்லுநர்கள், அவர் எழுதிய புத்தகங்கள் 'தமிழில் இல்லை', அதற்கு வேலையும், கூலியும் 'தமிழில் இல்லை', அதற்கு உயர்வும் இல்லை, என இன்னும் பல 'இல்லைகள்'! அவர் அனைவருக்கும் நான் சில இல்லைகளை திருப்பித் தர விரும்புகிறேன், அக்கால வானவியல் சாஸ்திரத்திற்க்கும், கணிடத்திற்கும், மருத்துவதிற்க்கும், கலைகளிலுக்கும் தோள் கொடுத்தத் தமிழை சில காலங்கலாய் நாம் வளர்க்கவில்லை, கணினிக்கும், இன்றைய அறிவியல்கும் தமிழ் சிறந்ததா என்று ஆராய்ந்து பார்க்க அதற்கொரு வாய்ப்புத் தரவில்லை, மனிதனுக்காகத் தான் மொழி, மனிதரால் தான் மொழி, "நீ மொழி வளர்க்க, மொழி உனை வளர்க்கும்' என புரிந்து கொள்ளவில்லை, நம் தவறான 'நாகரிக' கொள்கைகளால் தமிழ் தாழ்ந்து போகவும் இல்லை, அதன் இனிமையும், செம்மையும் குறைந்து போகவும் இல்லை, உங்கள் இல்லைகளை நான் ஒத்துக்கொள்ளவுமில்லை.

நான் தமிழினால் ஆங்கிலம் கற்றவன், முன்னொரு காலம் தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில இணையைத் தேடியது போய் இன்று காலத்தின் கட்டயத்தால் அதன் எதிர்மறையைச் செய்கிறேன்.என் போல பலர் உண்டு, அதை பெருமையாக நினைப்போரும் உண்டு, எனினும் நம்மை தொடர்ந்து வரும் தமிழர்க்கு இக்சூழ்நிலை ஏற்படாமல் அவர் அறிந்த தமிழிலேயே, அவர் சிந்திக்கும் தமிழிலேயே வெற்றி வாய்ப்புக்களை உருவாகக்க வேண்டும்.இதை படிக்கும் உம் போன்றோர் அதற்கு வழி காட்ட வேண்டும், அறிவீர்அது சிறிதெனினும் மலைக்குத் தகும். நல்ல தமிழ் புத்தகங்களையும் குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுங்கள், வீட்டில் ஆங்கிலம் பேசச் சொல்லி உம் அறிவீனதையும், முடிவுகளையும் அவர்க்கு ஊட்டாதீர்கள்.இரு மொழி புலமையும் பெருமை, தாய் மொழியே முதன்மை அதற்கு நம் பாரதியே சிறந்த எடுத்துக்காட்டு.தமிழைக் காப்பதற்க்கு சுத்தத் தமிழில் தான் தமிழர் பேச வேண்டும் எனும் தேவை இல்லை, அது நடைமுறையுலும் இயலாது. தமிழில் பேச வேண்டும் அதை திருந்தப் பேச வேண்டும்.தவறாக தமிழ் பேசுவதும், ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதும் உயர்வென்று ஒருவர் நினைத்தால் அவரை தாழ்வாக கருதி, இகழ்ச்சியுடன் அவர் மொழியின் ஆளுமையை சுட்டிக் காட்ட வேண்டும்.மீண்டும் அழுத்தி சொல்கிறேன், தமிழ் பேசும் ஆற்றல் குறைவாக இருத்தல் தவறல்ல, ஆனால் பிற மொழியில் பேசுதல் தாய் மொழியில் பேசுவதை காட்டிலும் உயர்வு என்று எண்ணும் 'எண்ணம்' அருவருக்கதக்கது , அது அழிய வேண்டும்.புதிதாய் எழுதுங்கள், தப்பும் தவறும் தோன்றினாலும் எழுதுங்கள், பிழைகள் உயிர் நீத்து நல்ல இலக்கியங்கள் பிறக்கும், மீண்டும் ஒரு பாரதியை, பாரதிதாசனை, கல்கியை உருவக்குவோம்.இவை அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், உண்மைகள் சில நேரம் கசக்கும்!என் எண்ணைகளை இங்கே பகிர்ந்த பின் நான் தெளிவுபடுத்த விரும்பும் சில கருத்துக்கள், மனிதரைப் போல தான் மொழிகளும், அவற்றுள் உயர்வென்றும் தாழ்வென்றும் ஏதும் இல்லை.மொழி கொண்டு பிரிவினை உருவாக்கும் எனையோர் வெளிபடுத்துவது மூடத்தனமும், சுயநலமும் மட்டுமே.தமிழர்க்கு தனி நாடு என்ற ஆசை எனக்கும் இருந்ததுண்டு, பலருக்கும் இருப்பதைக் கேட்டு ஆச்சரியப்பட்டதுண்டு, இப்போது பிரிவினையை மறப்போம், தமிழை எப்போதும் போல் நேசிப்போம்!எஞ்சீயதைத் தின்று, மரத்திற்கு மரம் தாவி, பிற மொழிக்காக நம்மை மாற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை நமக்கு வேண்டாம், நம் தமிழை வளர்ப்போம் நாம் நாமாய் இருப்போம்.


"தமிழ் இனி மெல்லச் சாகுமா?" சாகாது! படித்ததற்கு நன்றி. வாழ்க தமிழ்!வளர்க எம் மக்கள்!

- பராந்தகன் [பாலாஜி சுப்பையா ]


உதவிக்கு - Tamil to English

http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/






]